ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அங்கு ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் ஆடவிருக்கிறது. மற்ற இரு தொடர்களிலும் கேப்டன் விராட் கோலி முழுமையாக விளையாடினாலும், டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரியில் அவரது மனைவியான அனுஷ்கா ஷர்மாவின் பிரசவத்தின்போது உடனிருக்க வேண்டும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இந்தியா திரும்பவுள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால நிர்வாகி நிக் ஹோக்லே, “தனது மனைவியின் பிரசவத்தின்போது அவருடன் இருக்க வேண்டும் என்ற கோலியின் உணர்வை நாங்கள் மதிக்கிறோம். இருப்பினும், அவர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடுவார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரின் ஆட்டத்தைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
டெஸ்ட் தொடரின் பாதியில் பிரசவம் முடிந்து அவர் திரும்பி வர நினைத்தாலும் முடியாது. ஏனெனில் அவர் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். ஆகவே அது இயலாத காரியம்.
கோலி இல்லாவிட்டாலும் இரு அணிகளிலும் நிறைய ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இத்தொடரைக் கண்கவர் தொடராக மாற்றுவார்கள். ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து காத்திருக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா-ஆஸ். முதல் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி!