நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்குச் சென்றடைந்தது.
இதையடுத்து அங்கு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள், அணி ஊழியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் எட்டு வீரர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்து மருத்துவர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட், பாகிஸ்தான் அணியில் இன்னும் பலருக்குத் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், "கிறிஸ்ட்சர்ச்சில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என நியூசிலாந்து சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 18ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பயிற்சியை மேற்கொள்ளாமல் பாகிஸ்தான் அணியால் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: ஆட்டம் முடியும் நேரம்... கிருஷ்ணா அடித்த கோல்