உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் டென்னிஸ், குத்துச்சண்டை, கால்பந்து என பல சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சில பேச்சுகள் எழுந்துள்ளன.
இதனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி, பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் பிசிசிஐ சார்பாக ஐபிஎல் போட்டிகள் பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் பேசுகையில், ''ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. சூழலை கவனமாக கண்காணித்துவருகிறோம். தேவை எழும்போது நிச்சயம் சரியான முடிவுகள் எடுக்கப்படும்.
அதனால் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் வேண்டாம், நிச்சயம் நடக்கும். பல்வேறு நாடுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறார்கள். தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். கவுண்டி அணிகள் பலவும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளன. அதனால் இதுவரை எவ்வித பிரச்னையும் இல்லை'' என்றார்.
இதற்கிடையே, மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப், ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் பொதுமக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடும்போது பலருக்கும் வைரஸ் தொற்று பரவுவதற்கு அரசாங்கம் வாய்ப்பளிக்காது'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த இரு போட்டிகள் பட்டாஸாக இருக்கப்போகிறது : கங்குலி நம்பிக்கை!