கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இதுவரை 21ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இம்மாதம் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் தொடர் தற்போது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி, 'இந்தியாவில் தற்போதைக்கு கிரிக்கெட் கிடையாது' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கங்குலி, 'தற்போதைக்கு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். எங்களுக்கு கிரிக்கெட்டை விட மனிதர்களின் உயிர்தான் மிக முக்கியம். மனிதர்களின் உயிரைப் பறிக்கும் வைரஸ் பரவும் வேளையில், நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி யோசிப்பதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'கிரிக்கெட்டிற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தனிமைப்படுத்திக்கொள்வோம்' - கிறிஸ் வோக்ஸ்!