இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, கேப்டன் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிறகு 196 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் லாதம் - வாட்லிங் கூட்டணி சிறப்பாக ஆடியது.
இதில் லாதம் 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் கிராண்ட்ஹோம் - வாட்லிங் கூட்டணி இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்த்து ஆடியது. அதிலும் கிராண்ட்ஹோம் தொடக்கம் முதலே அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
இவர் 45 பந்துகளில் அரைசதத்தைக் கடக்க, ஆட்டத்தின் 103ஆவது ஓவரின்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் சில மணி நேர இடைவெளிக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது.
அதனையடுத்து வாட்லிங் - கிராண்ட்ஹோம் இணை தொடர்ந்து அதிரடியாக ஆட, இருவரும் இணைந்து ஆட்ட நேர முடிவில் 113 ரன்கள் சேர்த்தனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசி. 382 ரன்கள் சேர்த்தது. வாட்லிங் 81 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசி. அணி 138 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் நியூசி. பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து பேட்டிங் ஆடினால், இந்த போட்டி டிராவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.