ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்தத் தொடரின் மூன்றாவது லீக் போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் சமாரி அத்தாபட்டு ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
இலங்கை அணி 7.4 ஓவர்களில் 60 ரன்களை எடுத்தபோது மற்றொரு தொடக்க வீராங்கனை ஹசினி பெரிரா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, 30 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உள்பட 41 ரன்கள் எடுத்த சமாரி அத்தாபட்டுவும் அவுட்டாகினார்.
பின்னர் வந்த இலங்கை வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இலங்கை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஹெலே ஜென்சன் மூன்று விக்கெட்டுகளையும், அமிலா கெர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 128 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனை ரேச்சல் பிரைஸ்ட் ஆறு ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சுசி பேட்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சோபி டிவைன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்த ஜோடி 40 ரன்களைச் சேர்த்த நிலையில், சுசி பேட்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மேடி க்ரீன் - சோபி டிவைன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை ஏற்றியது.
இதனிடைய ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய சோபி டிவைன் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 19 பந்துகளில் எட்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், மேடி க்ரீன் 29 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 17.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 131 ரன்களை எட்டியது. இதன்மூலம், நியூசிலாந்து அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் 55 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உள்பட 75 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த சோபி டிவைன் ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.