இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சோதனையாக உள்ளது. மொத்தமாக ஆடிய நான்கு இன்னிங்ஸையும் சேர்த்தே 38 ரன்களை தான் எடுத்துள்ளார். அவரது விக்கெட் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் பேசுகையில், ''உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் விராட் கோலி. அதில் எவ்வித சந்தேகமுமில்லை. எங்கள் அணி வெற்றிபெறுவதற்கு அவரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தவேண்டும் எனத் திட்டமிட்டோம்.
அதிகமாக அவருக்கு ப்ரஷர் கொடுப்பதன் மூலம் அவரது விக்கெட்டை கைப்பற்றலாம் என நினைத்தோம். அது களத்தில் நிறைவேறியுள்ளது. எதிரணியில் இருந்து விராட் கோலி தவறு செய்வதைப் பார்க்க நன்றாக உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது நாளில் 16 விக்கெட்டுகள் விழுவது சாதனையாக இருக்க வாய்ப்புள்ளது. பிட்ச், சூழல் இரண்டும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டோம்.
இந்திய ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் தாழ்வான பந்துகளை எதிர்கொண்டு பழக்கமாகியுள்ளனர். அதனால் நியூசிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய கூடுதல் நேரம் எடுக்கும். நியூசிலாந்து வீரர்கள் அணியாக இந்திய வீரர்களை விக்கெட் வீழ்த்துவது நிறைவாக உள்ளது. நாங்கள் நாளை என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம்'' என்றார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்... இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் தடுமாறும் இந்தியா!