நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்திற்குச் சென்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர், இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறாதது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய அமீர், “நான் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பிடிப்பேன் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் தேர்வு செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இருப்பினும் இது தேர்வுக் குழுவின் முடிவாகும். அவர்களின் முடிவை நான் ஏற்கிறேன். இதன் மூலம் எனது திறனை வளர்த்துக்கொள்ள எனக்குத் தேவையான கால அவகாசம் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நான் மீண்டும் அணிக்குத் திரும்புவேன்.
மேலும் இத்தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களில் சிறந்து விளங்கும் வீரருக்கு நல்ல ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது.
நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு எனது வயதைக் காரணம் காட்டி பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நான் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது கிடையாது. அதனால் என்னால் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு முன்னேற முடியாது என்பதை உணர்ந்து தான் நான் அந்த முடிவை எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
28 வயதாகும் முகமது அமீர், பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் இவர் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து தொடர் நடத்துவது உறுதி: சவுரவ் கங்குலி!