நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 20) டுனெடினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இணை தொடக்கம் தந்தது.
பின்னர் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தமிம் இக்பால் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 19 ரன்களில் லிட்டன் தாஸும் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 41.5 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் மார்டின் கப்தில் அதிரடியாக விளையாடி ரன் வேட்டையைத் தொடர்ந்தார். 19 பந்துகளை எதிர்கொண்ட கப்தில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹென்ரி நிக்கோலஸ் - டேவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 21.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடிவந்த ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தொடரை வெல்வது யார்? வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து!