கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தியாவில் இதுவரை 21ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டும், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்ஸ்டாகிராம் நேரலையின் மூலம் தங்களது அணி வீரர்களுடன் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கேல் ஹஸ்ஸி பங்கேற்று பேசியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், எம்.எஸ்.தோனியுடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹஸ்ஸி கூறுகையில், "தோனி, முரளி விஜய்யுடன் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் விஜய் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடக் கூடியவர். ஆனால் நான் சிறுது தாமதமாகவே விளையாடத்தொடங்குவேன். விஜய் விளையாடும் போது நிதானமாக ரன்களை சேர்ப்பார். அவர் வேறு யாருடைய பேச்சையும் கேட்காமல் அவருடைய இயல்பான ஆட்டத்தையே எப்போதும் வெளிப்படுத்துவார்.
தோனியை பொறுத்த வரை, அவர் ஆட்டத்தை மதிப்பிடுபவர். ஒவ்வொரு முறையும் நான் ஆட்டத்தை விரைவில் முடிக்கும் படி அவரிடம் கூறுவேன். ஆனால், இல்லை அடுத்து வரும் பந்துவீச்சாளர் எப்படி பந்துவீசுவார் என்பது தெரிய வேண்டும் என்று கூறுவார். அவரை போன்ற எந்த வீரரையும் நான் கண்டதில்லை. ஆட்டத்தை மதிப்பிட்டு ஆடக்கூடியவர் என்றாலும், அவர் நினைத்தால் சிக்ஸர்களை அடிக்கும் திறன் பெற்றவர்", என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஸ்மித், வார்னரை கொண்ட ஆஸ்திரேலிய தொடர் சிறப்பானதாக இருக்கும் - ரோகித் சர்மா!