ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக அணியில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக வலம்வருபவர் நாதன் லயன். சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் தனது அசத்தலான ஆஃப் ஸ்பின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 454 ரன்கள் எடுக்க, பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில், அபாரமாக பந்துவீசிய லயன், நியூசிலாந்து வீரர்களான டாம் பிளண்டல் (49), ஜீத் ரவால் (31), வில்லியம் சொமர்வில் (0), வாகனர் (0), மேட் ஹென்றி (3) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். சிட்னி மைதானத்தில் லயன் கைப்பற்றும் முதல் ஐந்து விக்கெட்டுகள் இதுவாகும்.
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து ஜாம்பவான் இயான் போத்தமின் (383) சாதனையை அவர் முறியடித்து, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 17ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லயன் 385 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில், 17முறை ஐந்து விக்கெட்டுகள் அடங்கும். இதுமட்டுமின்றி, லயன் எதிர்கொண்ட அனைத்து டெஸ்ட் அணிகளுக்கு எதிராகவும் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.