இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி, கிரிக்கெட் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராக விளங்குபவர். அவ்வாறு, சமீபத்தில் அவரது ஆர்வம் இந்திய துணை ராணுவத்தின் பக்கம் திரும்பியது.
அந்த வகையில் உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய துணை ராணுவத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தார் தோனி. அதைத் தொடர்ந்து அவருக்கான அனுமதியை ராணுவத் தளபதி வழங்கினார். அதன்படி இந்திய துணை ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமெண்ட் பிரிவில், ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தோனி பயிற்சி பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு ராணுவ வீரர்களுடன் தோனி இணைந்தார்.
அதன்பின் தனது பணியை தொடங்கிய தோனி, கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட ராணுவ பணிகளை செய்தார். இதனிடையே அவ்வபோது தோனி ராணுவ உடையில் இருப்பது, ராணுவத்தினருடன் பாட்டு பாடுவது போன்ற படங்கள் வெளியாகின. பின்னர் பயிற்சியின் இறுதி நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி, லே பகுதியில் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட தோனி, சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் படம் வெளியாகி வைரலானது.
அதுமட்டுமல்லாது தோனி லடாக்கில் கிரிக்கெட் அகாடமி தொடங்கவுள்ளதாக உறுதியளித்தார் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில் தனது பயிற்சியை முடித்த தோனி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் டெல்லி திரும்பினார். திரும்பிய கையோடு அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்தார். இந்த படத்தை தோனி ரசிகர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த சமயத்தில் தோனியோ ஓய்வு குறித்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்துவந்ததோடு ராணுவத்திற்கு செல்வதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்தார். தற்போது ராணுவத்திலிருந்து வீடு திரும்பியுள்ள தோனி அடுத்துவரும் தென் ஆப்பிரிக்க தொடரில் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு கூடிய விரையில் விடை கிடைத்துவிடும்.