இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, உலகக்கோப்பைத் தொடருக்கு பின் கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வில் உள்ளார். தோனி எப்போது மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புவார் என பிசிசிஐ தலைவர் கங்குலியிலிருந்து இந்திய அணி வீரர்கள் அனைவரிடமும் கேள்வி எழுப்பப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை தோனியின் மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது தோனி குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்துள்ளார். அதில். ''நான் தேனியிடம் பேசிவிட்டேன். என்ன பேசினேன் என்பது எங்களுக்குள்ளேயே இருக்கட்டும். தோனி அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டார். விரைவில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பார்.
தோனிக்கு 38 வயதாகிவிட்டது. எனவே அவரால் டி20 கிரிக்கெட்டை மட்டும்தான் ஆடமுடியும். அதாவது டி20 கிரிக்கெட்டை ஆடவேண்டும் என நினைத்தால், அவர் மீண்டும் பயிற்சியைத் தொடங்கவேண்டும். ஐபிஎல் தொடர் ஆடிய பின்தான், அவருடைய உடல் தகுதி குறித்து தெரியவரும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால், நிச்சயம் இந்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வாக வாய்ப்புள்ளது. அவருடைய அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவியாக இருக்கும்.
தோனியை பற்றி ஒன்று மட்டும் எனக்கு தெரியும். அவரால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட முடியவில்லை என்றால், அணிக்குள் தன்னை புகுத்திக்கொள்ளமாட்டார் எனக் கூறினார்.
மேலும் நான்கு நாள் டெஸ்ட் போட்டி குறித்த கேள்விக்கு, ''நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் யோசனை முட்டாள்தனமானது. நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை ஏற்றுக்கொண்டால், விரைவில் குறைந்த ஓவர் டெஸ்ட் போட்டிகள் நடைமுறைக்குவரும். டெஸ்ட் போட்டியின் தற்போதைய நிலையை மாற்றக்கூடாது.
டெஸ்ட் போட்டிகள் ஃபார்மட் சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், தரவரிசையில் முதல் 6 இடங்களில் இருக்கும் அணிகள் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவேண்டும்.
பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இன்னும் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. பிங்க் நிற பந்துகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித சாதகங்களையும் ஏற்படுத்தவில்லை. பகலிரவு டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப சரியான பந்துகளை நிர்வாகங்கள் உருவாக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: ஹரிகேன்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்த ஹீட்ஸ்