இந்திய கிரிக்கெட் அணிக்கென புதிய அடித்தளத்தை அமைத்து அதில் வெற்றிகளைத் தேடித் தந்தவர் கங்குலி என்றால், அந்த அடித்தளத்தை விரிவாக்கி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்று தந்து அணியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர் தோனி.
இருவருமே இந்திய அணியின் சிறந்த ஆளுமைகளாகக் கருதப்படுகின்றனர். கடந்த ஜூலை 7ஆம் தேதி தோனியும் அதற்கு அடுத்த நாளான ஜூலை 8ஆம் தேதி கங்குலியின் பிறந்தநாளையும், இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினர். இதனை முன்னிட்டு, இவர்களில் யார் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்ற ஆய்வைத் தனியார் விளையாட்டு சேனல் நடத்தியது.
இதில், அணியில் கொண்டு வந்த மாற்றங்கள், சொந்த மண்ணிலும், அந்நிய மண்ணிலும் கேப்டனாக அவர்களது செயல்பாடு, கேப்டனாக அணிக்கு அவர்கள் வென்ற கோப்பைகள், 'கேப்டன்ஷிப்'பில் அவர்களது பேட்டிங் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் முன்னாள் கேப்டன்களும், வீரர்களுமான சங்ககரா (இலங்கை), கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா), கவுதம் கம்பீர் (இந்தியா), இர்ஃபான் பதான் (இந்தியா), கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (இந்தியா) ஆகியோர் வாக்களித்தனர்.
இதில், 0.5 புள்ளி வித்தியாசத்தில் கங்குலியை விட தோனி அதிகம் வாக்குகளைப்பெற்று இந்திய அணியின் சிறந்த கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கங்குலியால் தோனி பலன் பெற்றார் என, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நீங்கள் செய்யும் பல விஷயங்களால் உங்களை மதிப்பிடலாம். ஆனால் சில சமயங்களில் நீங்கள் எதையாவது மற்றவர்களுக்கு விட்டு செல்ல வேண்டும்.
அந்த வகையில், கங்குலி பலருக்கும், தனது வெற்றிப்பாதையை விட்டுச் சென்றுள்ளார். அதன்மூலம் பலனைப் பெற்றவர் தோனி. தோனி நல்ல வீரர், சிறந்த கேப்டனும் கூட. இந்திய அணியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதற்கான அஸ்திவாரத்தை கங்குலிதான் அமைத்துவைத்தார்" என்றார்.