இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இன்று (பிப்.24) தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர் டோமினிக் சிப்லி, ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜாக் கிரௌலி அரைசதம் அடித்த கையோடு, 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 100 ரன்களுக்குள்ளாகவே இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மேலும் தனது சொந்த மண்ணில் விளையாடிய அக்சர் பட்டேல், அபார பந்துவீச்சால் எதிரணியின் பேட்டிங் வரிசையை நிர்மூலமாக்கினார். இதனால் 48.4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிரௌலி 53 ரன்களை எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்திய அணியின் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: ஹோம் ஆப் கிரிக்கெட் முதல் மொடீரா வரை...