2007-08ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின்போது ஆஸி. வீரர் சைமண்ட்ஸை, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் குரங்கு எனத் திட்டியதாகச் சர்ச்சை எழுந்தது.
இதில் பாண்டிங், மைக்கெல் கிளார்க், ஹெய்டன் ஆகியோர் சைமண்ட்ஸிற்கு ஆதரவாகவும், சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜன் சிங்கிற்கு ஆதரவாகவும் சாட்சியளித்தனர். ஆனால் ஐசிசி ஹர்பஜன் சிங்கிற்கு மூன்று போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதித்தது. இதுவே மங்கி கேட் சர்ச்சை எனக் கூறப்பட்டுவருகிறது.
இது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங், ''மங்கி கேட் சர்ச்சைதான் இன்றுவரை எனக்கு கேப்டனாக தலைகுனிவை ஏற்படுத்திவரும் ஒரே சம்பவம்.
2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது எனது உணர்வினை வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஆனால் மங்கி கேட் சர்ச்சையின்போது ஆட்டம் எனது கைகளிலிருந்து சென்றுவிட்டது.
மங்கி கேட் சர்ச்சையால் ஹர்பஜன் சிங் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்தப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தோம். அந்தத் தோல்விக்கு மங்கி கேட் சர்ச்சைதான் காரணம் என அனைவருமே கருதினோம்.
அந்தப் போட்டிக்குப் பிறகு மங்கி கேட் சர்ச்சை ஒவ்வொரு நாளும் பெரிதாகப் பேசப்பட்டது. நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் எங்களின் ஆட்டம் அமைந்தது'' என்றார்.
இதையும் படிங்க: ஹாப்பி பெர்த்டே டூ டெஸ்ட் கிரிக்கெட்!