ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடாவில் நடைபெற இருக்கிறது.
இதற்காக இந்திய அணி வீரர்களுக்கு அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் முகமது ஷமி இந்தியாவுக்காக படைத்துள்ள சாதனைகள் குறித்தும், அவர் மீதான வழக்கு குறித்த விளக்கத்தையும் குறிப்பிட்டிருந்தது.
அந்த விளக்கத்தை ஏற்ற அமெரிக்க தூதரகம் முகமது ஷமிக்கு விசா வழங்க அனுமதி அளித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முகமது ஷமியின் மனைவி ஜஹான், தன்னை கொடுமைப்படுத்துவதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.