’லேடி சச்சின்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மித்தாலி ராஜ், கிரிக்கெட் வீராங்கனையாக பல சாதனைகள் புரிந்துள்ளார். இந்திய அணிக்காக 17 வயதில் கிரிக்கெட் ஆடவந்த மித்தாலி, அறிமுக போட்டியிலேயே சதமடித்து மிரட்டினார். தொடர்ச்சியாக ஏழு அரைசதங்களை அடித்ததன்மூலம், ‘அபாயகரமான வீராங்கனை’ என்று அழைக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மித்தாலி ராஜ், இப்போதுவரை கிரிக்கெட் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார். மித்தாலி ராஜ் தனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சச்சின், ஜெயசூர்யா ஆகியோர்களின் வரிசையில் இணைந்துள்ளார். (சச்சின் - 22 ஆண்டுகள், ஜெயசூர்யா - 21 ஆண்டுகள்)
மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளைக் கடந்து ஆடிக் கொண்டிருப்பதன்மூலம், உலகிலேயே அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆறாயிரத்து 731 ரன்கள் எடுத்திருக்கும் இவர், சர்வதேச அளவில் அதிக ரன்கள் அடித்த ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் 22 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி, கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே இன்னும் இரண்டு ஆண்டுகள் மித்தாலி ராஜ் கிரிக்கெட் விளையாடினால் சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் உள்ளது. சமீபத்தில், சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த மித்தாலி, ஓய்வுக்கான காரணமாக அவர் கூறிய வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.
ஆம், "2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காகத்தான், நான் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்" என்று கூறினார். இந்த வார்த்தைகளின் மூலம் இன்னும் இரு ஆண்டுகள் அவர் நிச்சயம் கிரிக்கெட் உலகில் வலம்வர தான் போகிறார். ஆகவே, சச்சினின் சாதனையை மித்தாலி ராஜ் முறியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.
இதனால் சச்சினை குறைத்துக் கூறுவதாக எடுத்துக் கொள்ளாமல், இந்தியா போன்ற நாட்டில் ஒரு பெண்ணாக அவர் செய்த சாதனைகளை நாம் கொண்டாடும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.