2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு எந்த நாடும் செல்லவில்லை.
இந்தப் பிரச்னை கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு நீடித்த நிலையில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சரிசெய்தது. அதையடுத்து தற்போது வங்கதேச அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இருந்தும் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பயம் தொடர்ந்துகொண்டே வருகிறது.
இதனை சரிசெய்யும் வகையில் கிரிக்கெட் விதிகளை உருவாக்கிய மேரில்போன் கிரிக்கெட் கிளப் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இந்த நான்கு போட்டிகளில் பிஎஸ்எல் அணியான லாகூர் குவாலண்டர்ஸ், பாகிஸ்தான் ஷாகீன்ஸ், நார்த்தென் எய்சிசன் கல்லூரி, முல்தான் சுல்தான்ஸ் ஆகிய நான்கு அணிகளுடன் எம்சிசி அணி விளையாடுகிறது. எம்சிசி அணிக்கு முன்னாள் இலங்கை அணி கேப்டன் சங்கக்காரா தலைமை தாங்குகிறார்.
இந்த சுற்றுப்பயணம் பற்றி எம்சிசி பயிற்சியாளர் அஜ்மல் சேஷாத் பேசுகையில், இந்த சுற்றுப்பயணம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருக்கும். இதில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை அனைவரும் காண்பார்கள். பாகிஸ்தானுக்கு மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எம்சிசியின் இந்தப் பயணம் உதவியாக இருக்கும். எம்சிசியில் சர்வதேச வீரர்களும், கவுண்டி வீரர்களும் உள்ளதால் பாகிஸ்தானின் வளரும் கிரிக்கெட்டர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்'' என்றார்.
இந்தத் தொடர் பிப்.14ஆம் தேதி தொடங்கி பிப்.19ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.