பிசிசிஐ சார்பாக வரும் 2021 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை ஆகிய மெகா தொடர்கள் நடக்கவுள்ளன. இந்தத் தொடர்களில் மேட்ச் ஃபிக்ஸிங் உள்ளிட்ட விஷயங்கள் அரங்கேறாமல் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுத்துவருகிறது.
சில நாள்களுக்கு முன்னதாக இலங்கையில் மேட்ச் ஃபிங்ஸிங்கில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் வழக்காக பதிந்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்ற சட்டத்தை இந்திய அரசும் நிறைவேற்ற வேண்டும் என ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கிரிக்கெட்டின் இரண்டு முக்கிய ஐசிசி தொடர்கள் அடுத்தடுத்து இந்தியாவில் நடக்கவுள்ளது. அந்த நேரத்தில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட முயல்வோரைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.
தற்போதைய சூழலில், இந்தியாவில் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றத்திற்கு தனித்துவமான சட்ட நெறிமுறைகள் எதுவும் இல்லை. காவல் துறையினர் மட்டுமே அதுபோன்ற வழக்குகளை விசாரித்து வருகின்றனர். அவர்களின் கைகளும் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் மேட்ச் ஃபிங்ஸிங் செய்ய முயல்வோரின் மீது எங்களால் முடிந்த அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அதற்கென தனிச்சட்டம் இருந்தால், இந்திய விளையாட்டு உலகின் மிகப்பெரிய மாற்றமாக அது இருக்கும். தற்போது ஐசிசி சார்பாக 50க்கும் குறைவான மேட்ச் ஃபிக்ஸிங் விசாரணைகளைத் தான் மேற்கொண்டு வருகிறோம். அதில் பெரும்பாலானவை இந்தியாவில் தான் நடந்துள்ளன. அதனால்தான் பிரத்யேக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்கிறோம்.
மேட்ச் ஃபிக்ஸிங்கிற்கு எதிரான சட்டம் வீரர்களைக் கட்டுப்படுத்தும் என்பதோடு, மேட்ச் ஃபிக்ஸிங் செய்பவர்களைத் தடுக்க மிகவும் உதவியாகவும் இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: Exclusive: ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி யார் சிறந்த பேட்ஸ்மேன்? - மோன்டி பனேசர் பதில்!