உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனாவால் இதுவரை 60 பேர் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.
மேலும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிடத நிலையில், ஐபிஎல் போட்டிகள் வருகிற 29ஆம் தேதி நடைபெறுமென சம்பந்தப்பட்ட தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால், ரசிகர்களுக்கான டிக்கெட் விற்பனையும் கலைகட்ட தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், மஹாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா அரசு ஐபிஎல் போட்டிகளுக்கன டிக்கெட் விற்பனையை தற்போது தடை செய்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து மஹாராஷ்டிராவின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், மும்பையிலுள்ள இரண்டு பேருக்கு தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்குமாறு அரசுக்கு அறிவித்துள்ளோம். ஏனெனில் உலக சுகாதார அமைச்சகம் கூறுகையில், அதிகபடியான மக்கள் கூடும் இடங்களில் இந்த வைரஸின் தாக்கம் எளிதில் பரவக்கூடுமென அறிவித்துள்ளது.
ஆதலால்தான் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்குமாறு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளோம் எனவும், இதுகுறித்த முடிவை கூடிய விரைவில் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் எந்த மாற்றமும் கிடையாது. நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் அதைப்பற்றி கவனிக்க மருத்துவக் குழுவோடு நாங்கள் தொடர்பில்தான் இருந்து வருகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கொரோனா பீதி: கை குலுக்கும் முறைக்குப் பதிலாக ஃபிஸ்ட்-பம்ப் முறையா?