கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது.
இதில், சிட்னியில் நேற்று நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசனுக்கு இன்று தொண்டை வலியும், இருமலும் இருந்தன.
இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்குமா என்ற அச்சத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு ஹோட்டலில் தனியறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நலன் கருதி அவர் அடுத்த 24 மணி நேரத்திற்கு தனியறையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகு அவர் அணிக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தது. கொரோனா வைரஸ் அச்சறுத்தலால் இப்போட்டி ரசிகர்களின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செல்சீ வீரர் ஹட்சன் ஒடோய்க்கு கொரோனா பாதிப்பு!