இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்தவாரம் முடிவடைந்தது. இத்தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இப்போட்டி ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இறுதி போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டனிலுள்ள ஆஜெஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஐசிசி பொது மேலாளர் ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், “ ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி, உலகக்கோப்பை தொடருக்கு நிகராக கொண்டாடப்படும் நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்காக நடத்தப்படும் முதல் சாம்பியன்ஷிப் தொடரும் இதுவாகும்.
இத்தொடரின் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு என்னுடைய வாழ்துகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதேசமயம் இப்போட்டியை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் கரோனா அச்சுறுத்தல் மற்றும் வீர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சௌதாம்ப்டன் மைதானத்திற்கு போட்டி மாற்றப்படுகிறது. அங்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகள்(உயிரி பாதுகாப்பு சூழல்) இருப்பதால் போட்டி மாற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்தியப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவது சவாலான ஒன்று' - சாம் பில்லிங்ஸ்