இலங்கை அணியின் கேப்டன், உலக அணியில் நீங்கா இடம்பிடித்தவர், கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கீப்பர்களில் ஒருவர், விளையாட்டில் நேர்மையை கடைப்பிடித்தவர் எனப் பல்வேறு அமசங்களையும் தனக்குள் வைத்திருந்தவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா.
கிரிக்கெட்டின் தொடக்கம்
இலங்கையில் உள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சங்ககாரா தனது பள்ளி முதல்வரின் தூண்டுதலினால் அண்டர் 13, 15, 19 ஆகிய கிரிக்கெட் அணிகளில் விளையாடிவந்தார்.
அதன்பின் இலங்கை ஏ அணிக்காக 20 வயதிலிருந்து விளையாடிவந்த சங்ககாரா 2000ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 156 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இதனால் அணியின் தேர்வாளர்களை ஈர்த்த சங்ககாரா 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணியுடன் தனது முதல் போட்டியைத் தொடங்கிய சங்ககாரா அப்போட்டியில் 35 ரன்களுடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் களமிறங்க அவர் 83 ரன்களை விளாசி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அன்று முதல் தொடங்கிய சங்ககாராவின் கிரிக்கெட் வாழ்க்கை பிரகாசிக்கத் தொடங்கியது. அதன்பின் அடுத்த ஆண்டே இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தேர்வான அவர் இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். அதைத்தொடர்ந்து அதே ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தையும் கடந்தார்.
அதன்பின் 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவுசெய்து அன்றிலிருந்து இலங்கை அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம்வரத் தொடங்கினர்.
பின் 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மார்வன் அட்டபட்டுவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 438 ரன்களைக் குவித்தார். இது அந்தக் காலகட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
அதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிக்கான உலக அணியில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இலங்கை அணியின் துணைக் கேப்டனாக:
2006ஆம் ஆஅண்டு வங்க தேச அணிக்கு எதிரான தொடரின் போது ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணியில் துணை கேப்டனாக இருந்த அட்டபட்டு காயம் காரணமாக விலகியதால் இலங்கை அணியின் துணைக் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார் சங்ககாரா.
அதன்பின் பாகிஸ்தான், இங்கிலாந்து என அடுத்தடுத்த தொடர்களுக்கும் இலங்கை அணியின் துணைக் கேப்டனாக செயல்படத் தொடங்கினார். பின்பு அதே ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களைக் குவித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதுமட்டுமில்லாமல் அந்தப் போட்டியில் அணியின் கேப்டனான ஜெயவர்தனேவுடன் இணைந்து 624 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக சேர்த்தார். இதுநாள்வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் இதுவாகும். இதன்மூலம் ஐசிசியின் உலக டெஸ்ட் அணிக்கு கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் 150 ரன்களுக்கு மேல் அடித்து புதிய சாதனையையும் நிகழ்த்தினார். இதன்மூலம் 2007, 2008ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் உலக டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்து அசத்தினார்.
2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால் இறுதில் ஆஸ்திரேலிய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது.
அதன்பின் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த சங்ககாரா அதன்பின் சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இலங்கை அணியின் கேப்டனாக...
2009ஆம் ஆண்டு ஜெயவர்தனே இலங்கை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது துணிச்சலாக இலங்கை அணியை வழிநடத்த முன்நின்றார் சங்ககாரா. அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தனது கேப்டன் திறமையினால் இலங்கை அணியை உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணி என்ற பெருமையடைய செய்தார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணியை இறுதிவரை அழைத்துச் சென்றார். ஆனால் அப்போதும் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது. அதன்பின் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய சங்ககாரா, தில்ஷானை இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கவும் முன்நிறுத்தினார்.
அதன்பின் ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும் வென்றார். மேலும் இலங்கை அணியை சிறந்த உலகக்கோப்பை அணியாகவும் மாற்ற உறுதுணையாக நின்றார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு
2011ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் 516 ரன்களைக் குவித்ததன் மூலம் தனது முதல் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரர் விருது, உலக டெஸ்ட், ஒருநாள் அணிக்கான விக்கெட் கீப்பராக தேர்வு என தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துவந்தார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவை எதிர்கொண்டது இலங்கை. அந்தப் போட்டியில் சங்ககாரா 54 ரன்களை விளாசி இலங்கை அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். அதுமட்டுமில்லாமல் அந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
அதே ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டில் 319 ரன்களை எடுத்து தனது முதல் சர்வதேச டெஸ்ட் முச்சதத்தை பதிவு செய்து தன்னுடை பேட்டிங் திறமை உலகிற்கு மீண்டும் நிரூபணம் செய்தார்.
ஐபிஎல் தொடரில் சங்ககாரா
இந்தியன் பிரிமீயர் லீக்கின் தொடக்க சீசனான 2008ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், அதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
தனது பேட்டிங், விக்கெட் கீப்பர் திறமையினால் 15 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சங்ககாரா 2015ஆம் ஆண்டு இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் உலகக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
அப்போது அந்த கிரிக்கெட் மைதானத்தில் ’நன்றி சங்கா’ ’கிளாஸ் நெவர் ரிட்டயர்’ என்ற பதாகைகள் மூலமுடுக்கெங்கும் பறந்தன. அந்தப் போட்டியைக் காண இலங்கை அணியின் ஜாம்பவான்கள் முரளிதரன், திலன் துஷாரா, சனத் ஜெயசூர்யா ஆகியோர் வந்தனர்.
ஓய்வுக்குப் பின் சங்ககாரா
அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றிருந்த சங்ககாரா ஐசிசியின் வர்ணனையாளராக 2017ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 2019ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பைத் தொடருக்கான ஐசிசி தொலைக்காட்சி வர்ணனையாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பின் தற்போது இங்கிலாந்தில் எம்சிசி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முதல் முறையாக இங்கிலாந்து நாட்டவர் அல்லாத வீரராக சங்ககாரா தேர்வு செய்யப்பட்டு தற்போது செயல்பட்டுவருகிறார்.
கிரிக்கெட்டில் சங்ககாராவின் ரன் விவரம்
- 134 டெஸ்ட் போட்டிகளில் ஒரு முச்சதம், 11 இரட்டை சதம், 52 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 400 ரன்களை விளாசியுள்ளார். இவரின் டெஸ்ட் சராசரி 57.14 ஆகும்.
- 404 ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள், 93 அரைசதங்களுடன் 14 ஆயிரத்து 234 ரன்களை எடுத்துள்ளார். இவரின் ஒருநாள் சராசரி 41.99 ஆகும்.
- 56 டி20 போட்டிகளில் விளையாடிய இவர் எட்டு அரைசதங்களுடன் ஆயிரத்து 382 ரன்களை எடுத்துள்ளார்.
- ஐபிஎல் தொடரில் 71 போட்டிகளில் பங்கேற்ற சங்ககாரா 10 அரைசதங்களுடன் ஆயிரத்து 687 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் சங்ககாரா செய்த சாதனைகள்
- தொர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை இரட்டை சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாமிடம் (11 முறை) பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 8000, 9000, 10 ஆயிரம், 11 ஆயிரதம், 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 634 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்த முதல் வீரர் (சங்ககாரா 287 & ஜெயவர்தனே 374)
- ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இலங்கை வீரர்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்த முதல் வீரர். 404 போட்டிகளில் 482 விக்கெட்டுகள் (383 கேட்ச் + 99 ஸ்டம்பிங்)
- விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவர். 13 ஆயிரத்து 262 ரன்கள்
இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சங்ககாரா இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்றால் அது மிகையாகாது. இந்தியாவிற்கு சச்சின் கிடைத்ததைப் போல இலங்கை அணிக்கு சங்ககாரா செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட சரித்திர நாயகன் பிறந்த தினம் நேற்று #HappyBirthdaySanga!
இதையும் படிங்க:சங்ககாராவுக்கு அடித்த யோகம்.. இவர்தான் ஃபர்ஸ்ட்!