இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இதில், முதலில் தொடங்கும் டெஸ்ட் தொடரின் நான்கு போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இரு அணி வீரர்கள் ஜனவரி 27ஆம் தேதி சென்னை வரவுள்ளனர்.
இத்தொடருக்கான இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். முன்னதாக, அஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்திருந்த குல்தீப் யாதவ், ஒரு போட்டிகளில் கூட அனுமதிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையளித்தது. மேலும் இந்திய அணியில் இருக்கும் அரசியல், இதன்மூலம் தெரிவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் குல்தீப் யாதன் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஆஸ்திரேலிய தொடரில் குல்தீப்பை களமிறக்காமல் இருந்ததற்கு காரணம் இருந்தது. அதன் காரணமாகவே அவரை நாங்கள் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை. ஆனால், அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. தற்போது வலைபயிற்சியின் போது அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் அவர தனது திறனை வெளிப்படுத்துவார். மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் குல்தீப் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: கடும் பயிற்சியில் உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லே!