1983 ஜூன் 25 இதே நாளில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிரிக்கெட்டில் தனக்கான புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்குப் பிறகு நாட்டில் கிரிக்கெட்டும் பிரபலமடைந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி வெல்லும் என யாரும் எதிர்பார்க்காததை தனது கேப்டன்ஷிப்பால் செய்து காட்டினார் கபில்தேவ்.
இந்திய அணி உலகக் கோப்பையை வென்று இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அப்போது இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் பலரும் இந்நாளில் இறுதிப்போட்டியின் தருணங்கள் குறித்து நினைவுகூர்ந்துவருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கீர்த்தி ஆசாத் கூறுகையில், ”லார்ட்ஸ் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முன்னிலையில் உலகக்கோப்பை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
உலகக்கோப்பையை வென்றவுடன் நாங்கள் பால்கனியிலிருந்து ரசிகர்களுக்கு கைகளைக் காட்டி நன்றி தெரிவித்தோம். இது கனவா அல்லது நனவா எனத் தெரிந்துகொள்ள பலமுறை என்னை நானே கிள்ளிக் கொண்டேன். அதன் பிறகு இந்திய வீரர்களுடன் நானும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன்.
இந்த வெற்றி எங்களது கிரிக்கெட் பயணத்தில் வரையறுக்கத்தக்க தருணமாகும். அது எங்கள் 15 வீரர்களுக்கும் மிகவும் எமோஷனலான தருணமாகும். இதனை இப்போது திரும்பிப் பார்த்தால் ஏதோ நேற்று நடந்தது போலதான் இருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பிறகு உலக வரைபடத்தில் இந்தியாவும் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியவந்தது. அதன்பின் இந்திய அணி கிரிக்கெட்டில் வல்லரசு நாடாக மாறியுள்ளது. இந்திய அணி, ஜாம்பவான்களாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எப்படி வீழ்த்தியது என்ற கேள்வியைத்தான் பலரும் என்னிடம் கேட்கின்றனர். அதற்கு ஒரே பதில் கபில் தேவின் வார்த்தைகள்தான். இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஆட்டத்தின் வெற்றியோ, தோல்வியோ குறித்து சிந்திக்காமல் நம்மால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று அவர் கூறினார்.
முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 183 ரன்களைத்தான் அடித்தோம். வலிமையான வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் லைன்அப்பை பார்க்கும்போது இது போதுமான ஸ்கோர் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். இது வெற்றி பெறுவதற்கான இலக்கு இல்லை என்றாலும், டிஃபென்ட் செய்யக்கூடிய இலக்குதான். எனவே, போட்டியில் நாம் கடுமையாகப் போராடுவோம் என கபில்தேவ் கூறினார்.
அவர் கூறியதைப் போலவே வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் குவிக்காதவாறு நாங்களும் சிறப்பாகப் பந்து வீசினோம். குறிப்பாக, விவியன் ரிச்சர்ட்ஸின் கேட்ச்சை கபில்தேவ் பிடித்ததுதான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது. அதன்பிறகு பந்துவீச்சில் நாங்கள் தந்த அழுத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தனர்” என்றார் ஆனந்த புன்னகையுடன்.