தற்போதைய நவீன கிரிக்கெட்டில், ”catches win matches” என்று கமெண்டெட்டர்கள் ஃபீல்டர்கள் குறித்து அதிகம் பேசிவருவதை ஒவ்வொரு போட்டியிலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பேட்டிங், பவுலிங்கைவிட ஃபீல்டிங்கில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட்தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றுகிறது. சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஒட்டுமொத்த போக்கையே சில ரன் அவுட்கள் மாற்றின. அந்த அளவிற்கு இந்த மாடர்ன் கிரிக்கெட்டில் ஃபீல்டர்கள் முக்கிய ரோலாக இருக்கின்றனர்.
ஆனால், அப்போது அங்கீகரிக்கப்படாமல் இருந்த ஃபீல்டிங் தற்போது அங்கீகரிப்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் யாராக இருக்க முடியும். ஃபீல்டிங் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு யார் வருகிறார், ஆம் ஜான்டி ரோட்ஸ்தான்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் இந்த மூன்றும் அடங்கியதுதான் கிரிக்கெட். ஆனால், ஆரம்பகாலக் கட்டத்தில் ஃபீல்டர்களைவிடவும் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும்தான் ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் தந்தனர். ஏனெனில், பேட்ஸ்மேன் என்றால் பந்தை பவுண்டரிக்கு அனுப்புவது, சிக்ஸ் மூலம் வான வேடிக்கை காட்டுவது, பந்துவீச்சாளர் என்றால் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என பந்துகளில் வேரியேஷன் காண்பித்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைப்பது என ரசிகர்களின் பார்வைக்கு விருந்து படைப்பார்கள். அந்த விருந்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் என்னவோ ஃபீல்டர்கள் என்றால் சும்மா நின்றுகொண்டு பந்தை பிடிப்பவர்கள் என்ற மனநிலை கிரிக்கெட்டில் இருந்தது.
ஆனால், இந்த ஸ்டீரியோ டைப்பை உடைத்தவர், ரோட்ஸ். மேற்கூறியதைப் போலவே 1975 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்ல அந்த அணியின் கேப்டன் க்ளைவ் லாயிட் மட்டும் காரணம் அல்ல, விவியன் ரிச்சர்ட்ஸ் தனது ஃபீல்டிங் மூலம் செய்த பங்களிப்பும் முக்கிய காரணம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் , டர்னர், இயான் சேப்பல், கிரேக் சேப்பல் என மூன்று வீரர்களை அவர் ரன் அவுட் செய்தார். குறிப்பாக, அவர் இயான் சேப்பலை ரன் அவுட் செய்ததுதான், அந்த போட்டியின் ஹைலைட். இயான் சேப்பல் வீழ்ந்த பிறகுதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை பிறந்தது.
ஆனால், க்ளைவ் லாயிட்டின் சதத்தின் கவர்ச்சியால் இந்த உலகம் ரிச்சர்ட்ஸின் ஃபீல்டிங்கை கொண்டாட மறந்தது. பின்னர், கிரிக்கெட்டில் வளரும் பிள்ளையாக இருந்த இந்தியா இளைஞனாக வளர்ந்தது 1983 உலகக்கோப்பையை வென்றதால்தான். லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் பிடித்த அந்த அசாத்தியமான கேட்சை இன்றுவரை கிரிக்கெட் மெக்காவின் பால்கனி மறக்காது.
இருப்பினும், 1992 உலகக்கோப்பையில் ஆஸிக்கு எதிரான போட்டியின் மூலம் ”ஜான்டி” என்ற புதிய பறவை அறிமுகமான பிறகுதான் ஃபீல்டிங் என்ற அத்தியாயம் மாற்றி எழுதப்பட்டது.
கிரிக்கெட்டில் ஃபீல்டிங் என்ற வார்த்தைக்கு அகராதி வேண்டுமென்றால் அவரது வீடியோஸை பார்க்கலாம். இந்த உலகம் எப்படி கி.மு, கி.பியோ அதுபோல் ஃபீல்டிங்கில் ஜா.மு (ஜான்டிக்கு முன்), ஜா.பி (ஜான்டிக்கு பின்)
பேக்வர்ட் பாயிண்ட் திசையில்தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ரன் அடிப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த எந்த ஃபீல்டர் அங்கு நிறுத்தப்படுகிறாரோ அவரே சிறந்த ஃபீல்டர். தற்போது வரை அந்த முறைதான் பின்பற்றப்பட்டுவருகிறது. அதற்கு விதை போட்டது ரோட்ஸ்.
1992 உலகக்கோப்பையை ஜான்டி இல்லாமல் நினைவுக்கூர முடியாது. உலகக்கோப்பையில் முதல்முறையாக அறிமுகமான தென்ஆப்பிரிக்க அணிக்கு தனது ஒரே ஒரு ரன் அவுட் மூலம் ஸ்பெஷலான அறிமுகத்தை ஏற்படுத்திவைத்தார். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், இன்சமாம்-உல்-ஹக்கை டைரக்ட் ஹிட் அடிக்காமல் அவரே டைரக்ட் ஹிட்டாக மாறி யாரும் பார்க்காத ரன் அவுட்டை பார்க்க செய்தார்.
ஜான்டி ரோட்ஸ் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நின்றால் ஜாம்பவான் சச்சினேக்கூட கட் ஷாட் ஆட அஞ்சுவார். பேக்வர்ட் பாயிண்ட் திசையில், பந்தை பிடிப்பதே மிகவும் கடினம். ஆனால், இவர் பந்தை பிடித்து பலமுறை தனது அசால்ட்டான த்ரோவால் பலரை ரன் அவுட் செய்துள்ளார்.
ஜான்டி குறித்து சச்சின் கூறிய வார்த்தைகள் இவை: "ஜான்டி பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நின்றால் ஒரு ரன்கூட எடுக்கமுடியாத நிலையை உருவாக்குவார். இதனால், பலமுறை எனக்குள் பயத்தை வர செய்துள்ளார். முதன்முதலாக மூன்றாவது நடுவர் தீர்ப்பு மூலம் அவர், என்னை ரன் அவுட் செய்ததை, நான் என்றும் மறக்கவேமாட்டேன்" என்றார். ஆம், மூன்றாவது அம்பயர் முடிவின் மூலம் முதல்முறை ஆட்டமிழந்தவர் சச்சின். அதை நிகழ்த்திக்காட்டியவர் ஜான்டி.
ஐந்து அடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்டு இறக்கை இல்லாமல் ஃபீல்டிங்கில் பறந்தார். அவர் ஃபீல்டிங்கில் நின்றால் பந்து அவரைத் தாண்டி செல்ல யோசிக்கும். 1993இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜான்டி, சப்ஸ்டிட்யூட் வீரராக களமிறங்கி ஐந்து கேட்சுகளை பிடித்து அணியை வெற்றிபெறச் செய்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்நாள்வரை, ஜான்டியைத் தவிர வேறு எந்த சப்ஸ்டிட்யூட் வீரரும் மேன் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியதில்லை. ஃபீல்டிங்கை போலவே பேட்டிங்கிலும் இவர் 360 டிகிரிக்கு சொந்தக்காரர். டி வில்லியர்ஸுக்கு முன்னதாகவே இவர் ரிவர்ஸ் ஸ்வீப், பேக் ஷாட் போன்ற பல வித்தியாசமான ஷாட்களை வெற்றிகரமாக ஆடியுள்ளார். ஃபீல்டிங்கை போல் பேட்டிங்கிலும் பலமுறை தென்னாப்பிரிக்க அணிக்கு ஜான்டி ரோட்ஸ் கைகொடுத்துள்ளார்.
ரசிகர்களுக்கு தென்னாப்பிரிக்க அணியை பிடிப்பதற்கு மிக முக்கியமான காரணம், ஃபீல்டிங். ஏனெனில் மற்ற அணிகளைவிட தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கில் தனி ஆட்சி செய்தது. அந்த ஆட்சியை தொடங்கி வைத்தவர் அவர்.
ஒருநாள்,டெஸ்ட் என இரண்டு ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர் என்ற பெயரை பெற்றார். இவர் கிரிக்கெட் விளையாடியக் காலத்தில் யுவராஜ் சிங், காலிங்வுட் போன்று பல சிறந்த ஃபீல்டர்கள் உருவாகத் தொடங்கினர். அவர்கள் முதற்கொண்டு தற்போதைய சிறந்த ஃபீல்டர்கள்வரை ஜான்டி ரோட்ஸே ரோல் மாடல்.
2003 உலகக்கோப்பையில் ஏற்பட்ட காயத்தில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். இருந்தாலும், ஃபீல்டிங்கில் இவரது வாரிசுகளாக கிப்ஸ், டி வில்லியர்ஸ் திகழ்ந்தனர். பின்னர், தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங்கை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச்சென்றார். அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒன்பது வருடங்களாக ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து பல ஃபீல்டர்களை உருவாக்கினார்.
ஃபீல்டிங்கில் தற்போது யார் கோலோச்சி நின்றாலும் அவர்களின் கோலுக்கு துணையாக நிற்பவர் ஜான்டி. தற்போது, தலைசிறந்த ஃபீல்டர்களும் ஜான்டி போல் ஆக வேண்டும் என தொடர்ந்து பறந்துகொண்டே இருக்கின்றனர். ஆனால், ஜான்டி என்னும் பருந்தின் வானத்தை அடைய தற்போதைய பறவைகளால் முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது கடினமே. ஏனென்றால் ஜான்டி என்ற பருந்து பந்தை இரையாக பார்த்தது. அந்த இரைக்காக காற்றைவிட வேகமாக பறந்தது.