இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் பிப்ரவரி 4ஆம் தேதிமுதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் ஒருநாள், டி20 போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், “ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடருக்குப் பின்னர் ஓய்வின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் விளையாடிவருகிறார். இதனால் அவரது பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களில் அவருக்கு ஓய்வளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
பும்ராவின் ஓய்வு காரணமாக காயத்திலிருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் குமார் மீண்டும் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடராஜன், சைனி ஆகியோர் தங்களது இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளதால், மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் காயத்தால் அவதிப்பட்டுவரும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து தொடரில் பங்கேற்காதபட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
விக்கெட் கீப்பிங்கில் கே.எல். ராகுல் சிறப்பாகச் செயல்பட்டுவரும் சூழலில், தற்போது ஃபார்முக்குத் திரும்பியுள்ள ரிஷப் பந்திற்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து தொடரில் அறிமுகமாவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுழல் மாயாஜாலத்தில் வெற்றியை ருசித்த இந்தியா