இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியா இல்லை கிரிக்கெட்டா என்பது இதுநாள் வரை பலருக்கும் தெரியாத அளவிற்கு வெளிநாட்டவர்களே வியந்து பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் ஒரே அணி எதுவென்றால் அது இந்திய கிரிக்கெட் அணிதான். உள்ளூர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்திய அணி வீரர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏன் பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள்கூட, 'நான் இவரைப் போன்று ஆக வேண்டும்' என கூறிய காலங்களும் உண்டு.
அந்த வரிசையில் பெரும்பாலான வீரர்கள் கூறுவது, நான் இந்த இந்திய கேப்டனின் தலைமையில் விளையாட வேண்டும் என்பதுதான். ஏனெனில், 'நாங்க இல்லாம இளைஞர்களை வச்சு என்ன செஞ்சிடப் போறானு பாக்கலாம்' என சொன்னவர்களைக் கூட, 'இவர் கேப்டன்ஷிப் சிறப்பாக உள்ளது' என பேசவைத்தவர். அவர்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
ஒரு காலத்தில் சச்சின், கங்குலி என சுற்றித்திரிந்த இளைஞர்களைப்போல, தற்போதுள்ள வெறித்தன ரசிகர்களை தனது அதிரடி ஆட்டத்தாலும், அசாத்திய கேப்டன்ஷிப்பாலும் தோனி... தோனி... என பித்துப்பிடிக்கவைத்தவர் எம்எஸ்டி. இவர் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.
ஆனால், ஆரம்பகால போட்டிகளில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தாத தோனி, அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான தனது ஐந்தாவது போட்டியில் களமிறங்கி, அதிரடி பேட்டிங் மூலம் முதலாவது சர்வதேச சதமடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத நாயகனாக வலம்வரத் தொடங்கினார்.
அதையடுத்து அதே ஆண்டில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்தியா சச்சினின் விக்கெட்டை இழந்து தடுமாறியபோது, மூன்றாவது வீரராகக் களமிறங்கி 183 ரன்களை விளாசி உலகப்பந்து வீச்சாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தினார்.
பின் 2007ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் படுதோல்வியடைந்த இந்திய அணியில் சச்சின், டிராவிட் போன்றவர்கள் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தனர். ஆனால், இந்தியத் தேர்வுக் குழுவே இளைஞர்களை வைத்து, இதனை நடத்தலாம் என முடிவெடுத்தது.
அந்த அணிக்கு கேப்டனை தேடும்போதுதான் தோனியின் பெயரை சச்சின் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கேற்றவாரே தோனி தலைமையிலான இளைஞர்கள் அடங்கிய இந்திய டி20 அணி உலகக்கோப்பையைச் சந்திக்கத் தயாரானது.
அந்தத் தொடரில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி, தங்களை விமர்சித்தவர்களை வாழ்த்து தெரிவிக்கவைத்தது தோனியின் வெற்றி. அதிலிருந்து அனைத்துவிதமான போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அதையடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரைத் தனது தலைமையிலான அணியை வைத்து கைப்பற்றி, வரலாற்றை மாற்றி எழுதுவைத்தார். பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்தங்கியிருந்த இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்குக் கொண்டுவந்து புதிய சாதனையையும் படைத்தார் 'தல' தோனி.
அதன்பின் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நினைவிருக்கும் ஒரு சம்பவம் அது. ரவி சாஸ்திரியின் வர்ணனையில், தோனி அடித்த சிக்சரை இந்தியர் மட்டுமல்ல உலகமே மனதில் வைத்திருக்கும். அந்த சிக்சர் (வின்னிங் ஷாட்) மூலம் 28 ஆண்டுகளாக இந்திய அணியின் கனவான ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியாவிற்குப் பெற்றுத்தந்தார் தோனி. இப்படி தனது கேப்டன்ஷிப்பால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த தோனி, பின்னாளில் அதே கேப்டன்ஷிப்பால் சக வீரர்களாலேயே புறம்பேசப்படும் நிலைக்கு ஆளானார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த தோனி, அடுத்தடுத்து இரு கோப்பைகளை சென்னை அணிக்கு பெற்றுக்கொடுத்து, தனது கேப்டன்ஷிப் குறித்த கருத்துகளை மாற்றியமைத்தார். மேலும் ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான உலகக்கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் தோனி.
2017ஆம் ஆண்டு கேப்டன் பதவிலிருந்து விலகி, அணியின் ஒரு வீரராக மட்டும் களமிறங்கினார் தோனி. அப்போதும்கூட அவரது திறமை சிறிதளவேனும் குறையவில்லை. இறுதியாக இந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அச்சம்பவம் நிகழ்ந்தது. ஏன் என்றே தெரியாமல் பல கோடி மக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்த தருணம் அது.
மைதானத்திலிருந்த அவரது ரசிகர்கள் அமைதியில் உறைந்துபோயினர். காரணம் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின்போது மார்ட்டின் கப்திலால் தோனி ரன் அவுட்டானதுதான். இந்த ரன் அவுட் பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
அதன்பின் சிறிதுகாலம் ராணுவத்தில் பணியாற்ற விரும்பிய தோனிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால், அதன்பின் தற்போதுவரை தோனியை அணியில் எடுக்காமல் தேர்வுக்குழு அவரின் வயதை குறிவைத்து அணியிலிருந்து விலக்கிவருகிறது. இதனால் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று எண்ணிய பலருக்கும் பதிலளிக்காமல் ஒதுங்கிய தோனி, சில நாட்களுக்கு முன்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை, இதைப்பற்றி என்னிடம் கேட்காதீர்கள் எனக் கூறினார்.
அன்று முதல் (2004 டிச.23) தொடங்கிய தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்றோடு பதினைந்து ஆண்டுகளைக் கடந்து, பயணித்து கொண்டிருப்பதும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு கொடுக்கும் ஆதரவுகளினாலேதான் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ரசிகர்களை உருவாக்கிய பெருமை தோனியையே சாரும்.
வெற்றிகரமான கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் இந்திய கிரிக்கெட் அணியை இதுநாள் வரை வழி நடத்திவந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதித்து இன்றோடு பதினைந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். அவர் மேலும் பல சாதனைகளப் படைக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #15YearsOfDhonism
இதையும் படிங்க: இந்தியா வரிசையில் இணைந்த பாகிஸ்தான்! டெஸ்டில் நடந்த சுவாரஸ்ய சாதனை!