இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஜாகிர் கானுக்குப் பிறகு, முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மா திகழ்கிறார். இவர், இதுவரை 91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 275 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆன்டிகுவாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில், இஷாந்த் ஷர்மா எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், அந்நிய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் அந்நிய மண்ணில் 145 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
இதில், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டை எடுத்தால் கபில்தேவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் அந்நிய மண்ணில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் வரிசையில் இரண்டாவது இடத்தையும் பிடிப்பார். இப்பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (200) முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.