இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போன்று, வெஸ்ட் இண்டீஸில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தமுள்ள ஆறு அணிகளில் பெரும்பாலும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களும் களமிறங்குவார்கள்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 வரை நடைபெறுகிறது. இதற்காக வீரர்களுக்கான ஏலம் விரைவில் நடத்தப்பட உள்ளதால், இந்த தொடரில் பங்கேற்க விரும்பிய வீரர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அந்த பட்டியலில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் கரீபியன் தொடரில் முதன்முறையாக அவரது பெயர் இடம்பிடித்துள்ளது.
இர்ஃபான் பதான் இதுவரை இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள், 24 டி20 போட்டிகளில் ஆடி 301 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதுதவிர 2 ஆயிரத்து 800 ரன்களையும் குவித்துள்ளார். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் அவரை எந்த அணியும் விலைக்கு வாங்கவில்லை. எனினும் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வர்ணணையாளராக பங்கேற்றார்.
எனவே இந்த கரீபியன் தொடரில் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டால், கரீபியன் டி20 போட்டியில் களமிறங்கும் முதல் வீரர் என்ற பெருமையையும் அடைவார்.