கடந்த மார்ச் 29ஆம் தேதி இந்தியாவின் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் கரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாட்டில் நிலவி வரும் சூழலில் இந்த தொடர் வெளிநாடுகளில் தான் நடைபெறுமென பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்பெருந்தொற்று காரணமாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஆடவர் டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதாக ஐசிசி நேற்று (ஜூலை 20) அறிவித்தது.
ஐசிசியின் இந்த அறிவிப்பால் ஐபிஎல் தொடர் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “இந்த தொடரின் அட்டவணை குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் ஐபிஎல் நிர்வாகக் குழு இன்னும் ஏழு அல்லது 10 நாட்களில் எடுக்கப்படும்.
தற்போதைய திட்டம்படி லீக் தொடரின் அனைத்து போட்டிகளும் (60 போட்டிகள்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார். முன்னதாக 2014இல் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால் முதற்பாதி ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.