2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக எட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அமீரகம் பயணித்தனர்.
இவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஆக. 28) பல்வேறு வீரர்களும் பயிற்சிக்கு திரும்பினர். இதனிடையே சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர், நிர்வாகிகள் 11 பேர் என 12 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடர் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடக்கும் என பிசிசிஐ அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ''தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இப்போது போட்டிகளுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்படும்'' என்றார்.
இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் அனைவரும் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்த பின், மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்பரிசோதனை முடிவுகள் நெகட்டிவாக இருப்பின், பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனால் ஐபிஎல் தொடரில் சென்னை அணியைக் கருத்தில் கொண்டு போட்டிகள் தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சுரேஷ் ரெய்னா!