2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அந்த தேதிகளில் ஐபிஎல் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.
இதையடுத்து ஐபிஎல் நிர்வாகத் தலைவர் பிரிஜேஷ் படேல், ஐபிஎல் தொடர் செப்.19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடர் குறித்த அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை அணி முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படவுள்ளது. இது குறித்து சென்னை அணி நிர்வாகி பேசுகையில், ''முதலில் அனைத்து வீரர்களும் சென்னையில் கூடவுள்ளனர். அதற்கு பின் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ளனர்'' என தெரிவித்தார்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தயாராவதற்காக மற்ற அணிகளுக்கு முன்பாக சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டது. தற்போது ஐபிஎல் தொடர் ஐந்து மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டு தொடங்கினாலும், சென்னை அணியே மீண்டும் முதல் அணியாக பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
இதையும் படிங்க: இனிதான் எனது ஆட்டம் ஆரம்பம் - டேவிட் வில்லி