இந்தாண்டு மார்ச் மாதத்தில் தொடங்க இருந்த ஐபிஎல் தொடர், கரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இதற்கான இந்திய வீரர்கள் தற்போது பலத்த கட்டுபாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கங்குலி, "கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது, செப்.19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள், பலத்த கட்டுப்பாடுகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையில், இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் வருகிற டிசம்பர் மாதம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாடவுள்ளது. இதுகுறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் ஐபிஎல் தொடரின 14ஆவது சீசன் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதேபோல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான போட்டிகள் குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
அடுத்த மாதம் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், சவுரவ் கங்குலியின் இந்த அறிவிப்பானது கிரிக்கெட் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:எதிர்காலத்தில் ஊதியக் குறைப்பிற்கு வாய்ப்புள்ளது : பிசிசிஐ