ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ, டெல்லி கேப்பிட்டல்ஸ் வரிசையில் பட்டத்தை வெல்லாத ஒரு அணிகளின் வரிசையில் முன்னணியில் சென்று நிற்பது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பயிற்சியாளர், ஒரு கேப்டன், புதிய வெளிநாட்டு வீரர்கள் என வலம்வந்த அணியில் முதல்முறையாக சரியான அணியைத் தேர்வுசெய்து ஆடவுள்ளது பஞ்சாப் அணி.
ஒவ்வொரு ஆண்டு ஏலத்தின்போதும் அனைத்து நட்சத்திர வீரர்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அணி இந்த ஆண்டு கொஞ்சம் அடக்கி வாசித்தது. முதல்முறையாக ஐபிஎல்லில் அனுபவம் உள்ள ராகுலை கேப்டனாக மாற்றியுள்ளது. அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை தெரிந்தோ தெரியாமலோ சரியான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
ஏனென்றால் அனில் கும்ப்ளே மாதிரியான ஒரு திட்டமிடலுடன் அணுகக் கூடிய மூளையை இந்திய கிரிக்கெட் அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனை பஞ்சாப் நிர்வாகம் செய்யுமா என்பதை அடுத்தத் தொடர் தொடக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
எப்போதும் ஆஸ்திரேலிய வீரர்களையே நம்பும் பஞ்சாப் நிர்வாகம் இந்த ஆண்டில் உள்ளூர் கர்நாடக அணியை நம்பி களமிறங்கியுள்ளது. ஏனென்றால் ராகுல், மயாங்க் அகர்வால், கருண் நாயர், கிருஷ்ணப்பா கவுதம், பயிற்சியாளர் கும்ப்ளே என அனைவரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் தான். இதுபோக நீண்ட ஆண்டுகளாக ஆடிய கிறிஸ் கெய்ல், சர்ஃபராஸ் கான் ஆர்சிபி அணிக்காக ஆடியவர்கள்.
பேட்ஸ்மேன்கள் என்று பார்த்தால் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரான், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், மன்தீப் சீங் என வலிமையாகவே இருக்கின்றனர். ஆனால் இதில் ராகுல், பூரான் ஆகியோரை தவிர்த்து கன்சிஸ்டன்சி என்னும் விஷயம் எந்த வீரர்களிடமும் இல்லை என்பதுதான் பெரும் குறை.
பந்துவீச்சாளர்கள் என்றால் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்ரெல், வழக்கம்போல் ஷமி, நில்ஜோயன், இஷான் போரல், ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், ஜேம்ஸ் நீஷம், ஜோர்டன் எனக் கலவையான அணியாக இருக்கிறது.
அதில் ப்ளேயிங் லெவன் என்று பார்த்தால் ஷமி, காட்ரெல், முருகன் அஸ்வின் ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள்.
2014ஆம் ஆண்டு கடைசியாக பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. அந்தத் தொடரில் மேக்ஸ்வெல் முக்கியப் பங்கு வகித்தார். இந்தத் தொடர் மீண்டும் களமிறங்கவுள்ளதால் அவர் எந்த நிலையில் ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
புதிய கேப்டனாக ராகுல் பதவியேற்றுள்ளதால், பஞ்சாப் அணியின் பெரும் சுமை ராகுல் தலையில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. அதனை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அவரின் ரன் குவிப்பும் இருக்கும்.
பஞ்சாப் அணிக்காக கடந்த தொடரில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் ராகுல் மட்டும்தான். அதனாலேயே இந்த ஆண்டு கேப்டன்சி கொடுக்கப்பட்டுள்ளது. அனுபவமில்லாத அணிக்கு தலைமை தாங்குவதால், அனுபவமுள்ள கும்ப்ளே பக்கபலமாக இருப்பார் என்று நம்பலாம்.
வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு பெரிய அணியையும் பஞ்சாப் அணியால் சாய்க்க முடியும். அதேபோல் எதிர் அணியினர் கொஞ்சம் சாதுர்யமாக ஆடினாலும் பஞ்சாப் அணியின் நிலை கஷ்டம்தான்.
ஐபிஎல் தொடர் நடக்கவிருப்பது ஐக்கிய அரபு அமீரகம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவம் மிகவும் பங்கு வகிக்கும். அப்படி பார்த்தால் முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், கவுதம் ஆகியோர் மட்டுமே உள்ளனர். வலிமையான பந்துவீச்சாளர்கள் இல்லை என்றாலும் அங்கே கும்ப்ளே என்னும் ஜாம்பவான் பட்டைத் தீட்ட உள்ளதால், அணி கரைசேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
மூன்று மைதானங்கள்தான் தொடர் முழுவதும் பயன்படுத்தப்படவுள்ளது. அதனால் பஞ்சாப் அணியின் ப்ளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என உறுதியாக நம்பலாம். கோடிகளைக் கொடுத்துவிட்டோம் என காட்ரெலை அணியில் எடுக்காமல், சிறந்த பந்துவீச்சாளரான கிறிஸ் ஜோர்டன் போன்ற பந்துவீச்சாளர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஜோர்டன் போன்ற வீரர்களின் லைன்னும், லென்த்தும் ஐக்கிய அரபு பிட்ச்களில் சிறப்பாக அமையும்.
ஆல் ரவுண்டராக கிருஷ்ணப்பா கவுதமின் ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது உறுதி. அவரை எப்படி அணி நிர்வாகம் பயன்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மும்பை அணியைப் போல் பஞ்சாப் அணி வலிமையான அணி இல்லையென்றாலும், புதிதாக கேப்டன்சியை கையில் எடுத்துள்ள ராகுலையும், பயிற்சியாளராக அமரவுள்ள கும்ப்ளே என்ற பெயராலும் பஞ்சாப் அணி மீது எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை இன்னும் சில வாரங்களில் பார்த்துவிடலாம்...!
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பலமும் பலவீனமும்... மும்பை இந்தியன்ஸ்!