2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 53 நாள்களில் 60 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக ஆகஸ்ட் 21ஆம் தேதி, அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கவுள்ளனர்.
இதற்கு முன்னதாக சென்னை அணி சார்பாக 6 நாள்கள் பயிற்சி முகாம் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் பயிற்சி முகாமில் சென்னை அணியின் தோனி, ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா, ராயுடு என அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.
இதுகுறித்து சென்னை அணியின் நிர்வாகி காசி விஸ்வநாதன் பேசுகையில், ''சொந்த காரணங்களால் பயிற்சி முகாமில் ஜடேஜா பங்கேற்க மாட்டார். சென்னை அணி ஆகஸ்ட் 21ஆம் தேதி துபாய் செல்லும்போது ஜடேஜா இணைவார்.
அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளெமிங், மைக் ஹசி ஆகியோரும் அணியினரோடு துபாய் பயணித்தின்போது இணையவுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் லுங்கி இங்கிடி மற்றும் டூ ப்ளஸிஸ் ஆகியோரிடம் பேசினோம். ஐபிஎல் தொடரில் பங்கேற்பீர்களா எனக் கேட்டதற்கு நிச்சயம் பங்கேற்போம் எனத் தெரிவித்தனர். ஆனால், செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னரே அணியோடு இணைவார்கள். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் தாஹிர், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற பின், சென்னை அணிக்குத் திரும்புவார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் கிரிக்கெட் வீரர் தற்கொலை!