ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (அக்.10) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 90 ரன்களை விளாசினார்.
இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு, தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபாமிலிருந்த டூ பிளேசிஸ் 8 ரன்களில் பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து ஷேன் வாட்சனும் 14 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - நாராயணன் ஜெகதீஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யபட்டது.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 37 ரன்கள் வித்தியாசத்தி சிஎஸ்கேவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.