நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இந்தத் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு விராட் கோலியின் பொறுப்பில்லாத ஆட்டமே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் விராட் கோலி 4 இன்னிங்ஸ்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சிலர் விராட் கோலியின் டெக்னிக் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் விராட் கோலி பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '' சர்வதேச அரங்கில் 70 சதங்களை விளாசியவரின் டெக்னிக் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்புவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
சில நேரங்களில் கிரிக்கெட் வீரர்களின் சிறந்த ஃபார்மில் இருக்கும்போது கூட ரன்களை சேர்க்க முடியாது. பாகிஸ்தானின் முகமது யூசுப்பிற்கு இதேபோன்ற பிரச்னைதான் வந்தது. இந்திய அணியில் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடாத நிலையில் விராட் கோலியை மட்டும் விமர்சனம் செய்வது சரியானதல்ல.
கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான விஷயம். விராட் கோலியின் ஆட்டத்தைப் பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம். அவரது டெக்னிக் பற்றியும் பேச வேண்டிய தேவையில்லை.
அவர் மன ரீதியாக மிகவும் வலிமையான வீரர். இன்னும் சில நாள்களிலேயே அவர் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நான் தான் விராட் கோலி' - வார்னர் மகளின் செல்ல சேட்டை!