நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியாவும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தும் கைப்பற்றின. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையே வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதனால், நாளைமறுநாள் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான பிரித்விஷா தனது இடதுகாலில் வீக்கம் ஏற்பட்டதால் அவர் வலைப்பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு இன்று ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஒருவேளை அவரது இடதுகாலில் எந்த பிரச்னையும் இல்லையென்றால், நாளை நடைபெறும் பயிற்சியில் அவர் பங்கேற்பார். இல்லையெனில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான ஷுப்மன் கில் இந்திய அணியில் அறிமுகமாவார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பயிற்சியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஷுப்மன் கில்லுக்கு ஃபுட் ஒர்க் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அதேசமயம், பிரித்விஷா ரன் அடிக்கத் தொடங்கினால் அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என கோலி தெரிவித்திருந்தார். ஒருவேளை பிரித்விஷா உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி அவருக்கு வாய்ப்பு வழங்குவார் என கூறப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த 20 வயதான பிரித்விஷா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 16, 14 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை - நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா