#INDvsRSA: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோர் நிதானமான தொடக்கத்தை தந்தனர். ஆனால் முதல் டெஸ்டில் இரட்டை சதமடித்த மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபடா பந்துவிச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தடுப்பு சுவர் புஜாரா வந்த வேகத்திலேயே ரபடாவின் பந்துவீச்சுக்கு இறையானர். ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித்துடன் இணைந்து அணியின் ரன் கணக்கை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் எதிர்பாராத நேரத்தில் விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 39 ரன்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த அஜிங்கிய ரஹானே நிதான ஆட்டத்தை வெளிபடுத்த, மறுமுனையில் ரோஹித் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வருகிறார். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது மூன்று விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 38 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபடா இரண்டு விக்கெட்டுகளையும், நோர்ட்ஜே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க:சர்ஃப்ராஸ் ஒரு முட்டாள்தனமான கேப்டன்... தைரியமில்லாத கேப்டன்... பொறிந்து தள்ளும் அக்தர்!