ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகெள்ளும் போட்டி அலுவலர்கள், மூன்று போட்டி நடுவர்கள், 12 நடுவர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பெண் நடுவரான ஜிஎஸ் லக்ஷ்மியின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் ஐசிசியால் நடத்தப்படும் சர்வதேச தொடர் ஒன்றில் போட்டி நடுவராகப் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார்.
ஜி.எஸ். லக்ஷ்மி, வரும் 22ஆம் தேதி பெர்த் வாகா மைதானத்தில் நடைபெறவுள்ள வெஸ்ட் இண்டீஸ் - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டி நடுவராக செயல்படவுள்ளார். முன்னதாக இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை இரண்டாம் டிவிஷன் தொடரில் நடுவராகச் செயல்பட்டு, ஆடவர் போட்டிகளில் போட்டி நடுவராகச் செயல்பட்ட முதல் பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்தார்.
![GS Lakshmi, இந்திய பெண் நடுவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6048866_gs.jpg)
ஐசிசி அறிவித்துள்ள இந்தப் பட்டியலில் லக்ஷ்மியுடன் சேர்த்து லாரன் அகன்பேக், கிம் காட்டன், கிளார் போலோசாக், சூ ரெட்பெர்ன், ஜாக்லின் வில்லியம்ஸ் என மொத்தமாக ஆறு பெண் நடுவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடுவர்களில் நிதின் மேனன் என்ற ஆண் இந்திய நடுவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிரெண்ட் போல்டிடம் முதலிடத்தைத் தாரை வார்த்த பும்ரா