ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான மக்களும், காடுகளும், விலங்குகளும் பாதிப்பைச் சந்தித்தன. இவர்களுக்கு உதவி செய்வதற்காக உலகின் பல்வேறு பகுதியினரும் நிவாரணம் அளித்து வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி அதற்கான நிதியை வழங்க முடிவுசெய்யப்பட்டது. இதனால் பாண்டிங் தலைமையில் ஒரு அணியும், கில்கிறிஸ்ட் தலைமையில் ஒரு அணியும் உருவாக்கப்பட்டது. இதன் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டி நாளை நடக்கவுள்ளது.
இந்தப் புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கவுள்ளதால், பாண்டிங் அணியின் பயிற்சியாளராக செயல்படும் சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''இது ஒரு எச்சரிக்கையான நேரம். நம் மனிதம் மீதான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய காட்டுத்தீயை பேரழிவு என்று சொல்வதே குறைந்த வார்த்தை. இதில் ஏராளமான மனித உயிர்களுடன், காடுகளும் விலங்குகளும் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதுகுறித்து யாரும் பேசாமல் இருக்கிறோம். நமது வாழ்வில் காடும் விலங்குகளும் மிகவும் முக்கியம்.
அதனால் நான் இந்தப் போட்டிக்கு என்னால் இயன்றதை செய்கிறேன். நிதி திரட்டுவதற்கு என்ன வழியெல்லாம் இருக்கிறதோ, அந்த வழிகளில் எல்லாம் உதவியை செய்து வருகிறேன்.
1991ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வந்ததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நான்கு மாதங்கள் இங்கே வாழ்ந்தேன். நான் இந்தியா திரும்பி சென்றபோது, ஆஸ்திரேலிய மொழி என்னை விட்டு நீங்காமல் இருந்தது. அந்த நேரம் எனது கிரிக்கெட் மிகவும் மேம்பட்டது.
ஆஸ்திரேலியர்கள் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். போட்டி என்று வந்தால் அப்படிதான் இருக்கவேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயம் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவரில் யாரை தேர்வு செய்வீர்கள்?
நான் எப்போதும் யாரோடும் யாரையும் ஒப்பிட மாட்டேன். நான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் என்னோடு பலரையும் ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர். ஆனால் நான் எப்போதும் மற்றவர்களை அவர்களாகவே இருக்க சொல்வேன். யாரை தேர்வு செய்வேன் என்றால் நிச்சயம் விராட் கோலி தான். இந்தியனாக இருந்துகொண்டு இந்திய வீரரை தான் தேர்வு செய்வேம். ஸ்டீவ் ஸ்மித்தை எதிரணியில் அமர வைப்பேன்.
இரு வீரர்களும் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஆட்டங்களைக் கண்முன் காட்டி வருகின்றனர். இருவரின் ஆட்டத்தையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
சர்வதேச அளவில் எந்த கிரிக்கெட் வீரரின் ஆட்டம் உங்களைப் போலவே உள்ளது?
என்னால் போல் நிறைய வீரர்கள் ஆடுகிறார்கள். ஆனால் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக வெளியேறினார். அப்போது அவருக்கு மார்னஸ் லபுஷானே களமிறங்கினார். அப்போது ஆர்ச்சர் வீசிய இரண்டாவது பந்து மார்னஸ் ஹெல்மட்டில் அடித்தது. அடுத்த 15 நிமிடங்கள் பிரமிப்பாக இருந்தது. அந்த நிமிடம் அவர் சாதாரண வீரர் இல்லை என்பதை அறிந்தேன்.
கிரிக்கெட் வீரர்களுக்கு ஃபூட் வொர்க் (Foot Work) அவ்வளவு எளிதாக பிடிபடாது. ஏனென்றால் ஃபூட்வொர்க் வரவேண்டும் என்றால், நாம் மனரீதியாக உறுதியாக இருக்கவேண்டும். மார்னஸ் லபுஷானேவின் ஃபூட் வொர்க் அபாரமாக இருக்கிறது. அவர் மனரீதியாக மிகவும் பலமாக உள்ளார்'' என்றார்.
முதல்முறையாக சச்சின் பாகிஸ்தான் தொடரில் களமிறங்கியபோதும் வாக்கர் யூனுஸ் வீசிய பந்து மூக்கில் பட்டு இரத்தம் வந்தது. ஆனால் அதனையும் மீறி அடுத்த பந்தை சச்சின் பவுண்டரிக்கு அனுப்பியதை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முக்கிய வீரர்களின் தொடர் காயங்கள்... ஓய்வில்லாமல் தொடர்ந்து செயல்படும் இந்திய அணி!