இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விராட் கோலி, மயாங்க் அகர்வால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியது. பின்னர் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு ஃபாலா - ஆன் வழங்கியது. பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் வீரர்கள் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்க வீரர்கள் மார்க்ரம் 0, டி ப்ரூயுன் 8, கேப்டன் டூ ப்ளஸிஸ் 5, எல்கர் 48, பவுமா 38, டி காக் 5 என ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி வெற்றியின் அருகில் வந்தது.
ஆனால் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய பில்லண்டர் - மகராஜ் இணை இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து இந்திய அணியின் வெற்றியைத் தள்ளி போட்டனர்.
இதையடுத்து உமேஷ் யாதவ் பந்தில் பில்லண்டர் 37 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரபாடா 4, மகராஜ் 22 என தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் 189 ரன்களுக்கு இழந்து சரணடைந்தது. இறுதியாக இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிக்கலாமே: #CPL2019: இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது பார்படாஸ்!