நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ஆக்லாந்தின் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோகமாக அமைந்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா எட்டு ரன்களில் நடையைக் கட்ட, தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை நியூசிலாந்து பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. நிதானமாக ஆடிய இந்த இணை, 11 ஓவர்களில் முடிவில் இந்திய அணி ஸ்கோர் 63 ரன்களை எட்ட உதவியது.
பின்னர் இஷ் சோதி வீசிய 12ஆவது ஓவரில் 13 ரன்களை விளாசிய இந்த இணை, பென்னட் வீசிய 15ஆவது ஓவரில் 16 ரன்கள் எடுத்து அசத்தியது. இதனிடையே கே.எல். ராகுல் இந்தத் தொடரில் இரண்டாவது அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவையிருந்த நிலையில், அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த சிவம் தூபே சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிபெறவைத்தார்.
![விராட் கோலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5850051_kohli.jpg)
இறுதியாக இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அரைசதம் விளாசிய கே.எல். ராகுல் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஆஸி. ஓபன்: 11ஆவது முறை காலிறுதிச் சுற்றில் ஜோகோவிச்!