இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மவுண்ட் மாங்குனியில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 296 ரன்கள் எடுத்தது.
பின்னர் 297 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்தில் - நிக்கோல்ஸ் இணை அதிரடியாக ஆடியது. இவர்களைக் கட்டுப்படுத்த இந்திய கேப்டன் விராட் கோலி அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களை மாற்றியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. சிறப்பாக ஆடிய கப்தில் அரைசதம் அடித்து ஆட முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 106 ரன்கள் சேர்த்தது. பின்னர் சாஹல் பந்தில் கப்தில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 22 ரன்களில் வெளியேற, நியூசிலாந்து அணி 27.1 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்திருந்தது. இதனிடையே தொடக்க வீரர் நிக்கோல்ஸ் அரைசதம் விளாசி அதிரடியில் மிரட்டினார்.
வில்லியம்சனைத் தொடர்ந்துவந்த ராஸ் டெய்லர் 12 ரன்களிலும் நிக்கோல்ஸ் 80 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, இந்திய ரசிகர்கள் சிறிது நேரம் பெருமூச்சுவிட்டனர். ஆனால் துணை கேப்டன் லாதம் ஒருமுனையில் அதிரடியாக ஆட அவருக்குத் துணையாக வந்த கிராண்ட்ஹோம் இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினார். 40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 223 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
தொடர்ந்து அனைத்து ஓவர்களிலும் சிக்சரும், பவுண்டரியுமாய் பறக்க இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென தெரியாமல் மோசமான பந்துகளையே தொடர்ந்து வீசினர். இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதில் தாகூர் வீசிய 46ஆவது ஓவரில் 20 ரன்கள் விளாசியதோடு, கிராண்ட்ஹோம் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 24 பந்துகளுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுக்கவேண்டிய நிலை வந்தது. பின்னர் கிராண்ட்ஹோம் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.
இறுதிவரை களத்தில் நின்று ஆடிய கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 58 ரன்களும் லாதம் 34 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக, நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
டி20 தொடரை 5-0 என்று இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றி பதிலடி இந்தியாவுக்கு நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: சொதப்பிய டாப் ஆர்டர்... அசத்திய மிடில் ஆர்டர்... நியூசி.க்கு 297 ரன்கள் இலக்கு!