கொல்கத்தாவில் வங்கதேச அணிக்கு எதிராக பகலிரவு போட்டியாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளை கண்ட முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
போட்டி முடிந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி இந்திய அணியின் வெற்றிக் குறித்து கூறுகையில், "தாதா கேப்டனாக இருந்தபோதுதான் இந்த அதிரடியான ஆட்டமெல்லாம் தொடங்கியது. அவரது பாதையில்தான் தற்போது நாங்கள் பயணித்து வருகிறோம்" என்றார். கோலியின் இந்த கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறுகையில்,
"இது இந்திய அணியின் சிறப்பான வெற்றிதான். ஆனால், இந்த இடத்தில் நான் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். இந்திய அணி அதிரடியாக ஆடத் தொடங்கியதே கங்குலி காலத்தில்தான் என தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார் என்பதால் அவரைப் பற்றி கோலி நல்ல முறையாக பேசுகிறார்.
ஆனால், இந்திய அணி 1970 -1980 காலக்கட்டங்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை கண்டபோது கோலி பிறக்கவே இல்லை. பலருக்கு கிரிக்கெட் 2000த்தில்தான் தொடங்கியது என நினைக்கிறார்கள். ஆனால், 1970 களிலேயே இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. அதேபோல வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தொடரை டிராவும் செய்துள்ளது மற்ற அணிகளை போல தொடரில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
தற்போதைய இந்திய அணியின் பந்தவீச்சுக் குழு எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் நாம் செய்த கடின உழைப்புக்கான பலன்களைதான் தற்போது அனுபவித்துவருகிறோம்" என்றார்.