கிரிக்கெட்டில் 1980,90 காலக்கட்டங்களில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் பெரும்பாலோனார் தற்போது 50 வயதை நிச்சயம் கடந்திருப்பார்கள். அவர்களது ஆட்டத்தை ரசிகர்கள் ஹைலைட்ஸைத் தவிர நேரில் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. 50 வயது கடந்தவர்களுக்கான இரண்டாவது உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் மார்ச் 10 முதல் 24ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நபிமியா, ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் முதல்முறையாக பங்கேற்கவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய அணி, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நமிபியா, வெல்ஸ் அணிகளுடன் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் இரண்டு அணிகள் உள்ளன.
மார்ச் 11ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டி மூலம், இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பிரபல தொழில் நிறுவனர் சைலேந்திரா சிங் நியக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் 15 ஆண்டுகளாக பாம்பே ஜிம்கானா அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன். இங்கிலாந்து கவுன்டி போட்டியில் சிறந்த வீரர்களை எதிர்த்து விளையாடியுள்ளேன். இந்தத் தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயம் இந்தத் தொடரில் நான், அஜய் ராயுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக்கோப்பையுடன் நாடு திரும்புவோம்" என்றார்.
இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கும், கேப்டன் சைலேந்திர சிங்கிற்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் 1983 உலகக்கோப்பை நாயகனுமான கபில் தேவ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு சிட்னியில் நடைபெற்ற 50 வயது கடந்தவர்களுக்கான முதல் உலகக்கோப்பை ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆனால், அப்போது இந்தத் தொடரை ஐசிசி அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7,000 விக்கெட்டுகள்; 85 வயதில் ஓய்வு - வெஸ்ட் இண்டீஸ் வீரரின் 60 வருட பயணம்!