இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடர் மார்ச் 12ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் நியூசிலாந்து தொடரில் சரியாக செயல்படாத கேதர் ஜாதவ், அகர்வால் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் ஆடிவரும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பேருக்கு பதிலாக காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய ஷிகர் தவான் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஹெர்னியா பிரச்னையால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த புவனேஷ்வர் குமார், முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூவரும் டிவொய் பாட்டில் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல் புதிய வீரர் சுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடருக்கு விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. ரிஷப் பந்த், கேஎல் ராகுல் இருவரும் அணியில் இருப்பதால் விக்கெட் கீப்பராக கோலி ராகுலையே பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட சுனில் ஜோஷி தலைமையில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, விராட் கோலி, கேஎல் ராகுல், மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், சாஹல், பும்ரா, சைனி, குல்தீப் யாதவ், சுப்மன் கில்.
இதையும் படிங்க: உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ஷஃபாலி வர்மா!