நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்றுள்ள மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - கே.எல். ராகுல் இணை களமிறங்கியது. இந்த இணை பவர் ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. சரியான பந்தைத் தேர்வுசெய்து பவுண்டரிகளை விளாசிவந்தது. இதனால் 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது.
பின்னர் பென்னட் வீசிய ஆறாவது ஓவரில் 1, 6, 6, 4, 4, 6 என ரோஹித் சர்மா அடித்து அசத்தினார். இந்த ஓவரில் 27 ரன்கள் எடுத்ததன் மூலம் ரோஹித் சர்மா தனது அரைசதத்தை 23 பந்துகளில் பதிவுசெய்தார்.
முதல் விக்கெட்டிற்கு இந்த இணை ஒன்பது ஓவர்களில் 89 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 27 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து ஒரே ஓவரில் ரோஹித் சர்மா 65 ரன்களிலும், சிவம் தூபே 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது.
இதையடுத்து இணைந்த கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது.
பின் கடைசி நான்கு ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆட, சாண்ட்னர் வீசிய பந்தில் 17 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் 38 ரன்களில் ஆட்டமிழக்க 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது.
பின்னர் கடைசி ஓவரில் மனீஷ் - ஜடேஜா இணை அதிரடியாக ஆடி 18 ரன்கள் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்கள் சேர்த்தது.
இதையும் படிங்க: ஒரே போட்டியில் 48 சிக்சர், 70 பவுண்டரி... சந்தேகத்தை எழுப்பிய வங்கதேச உள்ளூர் கிரிக்கெட்